-முஹம்மது ராஜி-
மன்னித்துக்கொள்
என் மியான்மார்
சகோதரா ..
எம்மை
மன்னித்துக்கொள் .
–
உன் துயர மூட்டைகளை
நாம் சுமந்தால்
தூங்க கிடைக்கிற
தொட்டில்களுக்கு
இங்கே
ஓட்டை
விழுந்து விடும்.
–
தூரமாய்
நீ இருப்பதால் -எம்
துஆக்களில்
தினம்
உன்னை
சேர்ப்பதில்லை
–
மீடியாக்களை போலவே
எம் நாடிகளும் ஆகியதால்
ஆறிப்போய் விட்டது
உன்
அலறல் சத்தங்கள் .
–
காலனித்துவம் தோண்டிய
தேசியவாத குழிக்குள்
துவண்டு போன
நாங்கள்,
உன் முகாரிகளை
முகப்புத்தகங்களில்
மட்டுமே படித்து
மூக்கு வடிக்கிறோம்
–
உன்
தூதுவராலயம் முன்
திரண்டு நிற்பது
எங்கள் தேசத்தின்
பன்சலைகளை
தீப்பிடிக்க வைக்கும்.
குனூத்துக்களுக்கு
அர்த்தம் இழக்க வைக்கும் .
பல பேஷ் இமாம்களை
பீரங்கிகளாக்கி
எம்மை
விமர்சிக்க வைக்கும்
–
அடங்கி போவதுதான்
பொறுமை என்று
எம் ஆலிம்கள்
எடுத்த பாடங்கள் ,
சலவை செய்யப்பட்ட
மூலைகளில்
இன்னமுமே
சாயம் போகவில்லை
–
சகோதரிகளின் மானம்
சல்லடைகளாக்கப்படுகிற
போதும்
சொரணை அற்று
செத்த பிணமாய் போய்விட்ட
எங்களை
மன்னித்துக்கொள்
சகோதரா ..
–
பிறப்புத்தான்
ஊரை சொந்தமாகும்
என்ற விதியை
பொய்ப்பிய்த்த
என் அன்பு சகோதரா..
இறப்புக்களின் கொடூரங்கள்
எழுதிய வரலாறுகள்
நீங்கள் .
புத்தர்களின் சீடர்கள்
செதுக்கிய
சித்திரவதை சிற்பங்கள்
நீங்கள் .
கலிமா மொழிந்த
கண்டங்களுக்கு
கண்ணில் படாத
கடதாசி குப்பைகள்
நீங்கள் .
ஐ நாவின் செல்லாக்காசு
அறிக்கைகளின்
கருப்பொருள் நீங்கள் .
வெள்ளிக்கிழமை
மிம்பர்களின்
வெடிக்காத
பீரங்கி குண்டுகள்
நீங்கள் .
—
அமெரிக்காவுக்கு எதிராக
அலவாங்கு தூக்குவோம்
அது
அட்லான்டி தாண்டி
இருக்கிறது என்ற
அசட்டு தைரியத்தில்.
இஸ்ரேலுக்கு எதிராய்
கொடிகளை எரிப்போம் ;
கோஷங்களை உயர்த்துவோம்
இங்கே
யூதர்கள் இல்லை என்ற
துணிவில் .
..
உனக்கு மட்டும் ..
எதுவுமே இல்லை
..
மானசீகமாக மன்னித்துக்கொள்
என் சகோதரா
இருப்புக்களுக்கு
இங்கே
சுருக்கு வந்துவிடும் என்ற
அச்சத்தில் …
–
மன்னித்துக்கொள்
என் மியான்மார்
சகோதரா ..
எம்மை
மன்னித்துக்கொள் .
The post மன்னித்துக்கொள் என் மியான்மார் சகோதரனே…!!! appeared first on Sri Lanka Muslim.