சில்லையூர் செல்வராசன் அரங்கில் வகவத்தின் 32 வது கவியரங்கு
மூத்த படைப்பாளி அந்தனி ஜீவா சிறப்பதிதி
வலம்புரி கவிதா வட்டம் தனது 32 வது கவிதை நிகழ்வினை கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரியில் கடந்த பௌர்ணமி தினமான 14-11-2016 காலை நடாத்தியது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்திய இந்த நிகழ்வு பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன் அரங்கில் இடம்பெற்றது.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தஎன்று , ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சத்திய எழுத்தாளர் நாகூர் கனியும், கலையழகி வரதராணியும் செய்திருந்தனர்.
சிறப்பதிதியாக கலந்து கொண்டு அந்தனி ஜீவா தனதுரையில்,
‘ சில்லையூர் செல்வராசனின் இயற் பெயர் மரியதாஸ். சில்லையூர் செல்வராஜன் கட்டாயம் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். அவரது கவிதைகளை யெல்லாம் மீண்டும் எடுத்து நாம் வாசிக்கவேண்டும். அவரது அபார ஆளுமையை நாங்கள் அப்போது புரிந்து கொள்வோம். சிலர் அவரை ஒரு விளம்பரக் கவிஞர் என்று மட்டும் அடையாளப்படுத்தி வைத்திருக்கின்றனர் நான் அண்மையில் சந்தித்த ஒரு பேராசியரிடம் நீங்கள் அவரை சரியாக சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டேன். ஆரை நுர்ற்றாண்டுக்கு மேலாக பல்துறை ஆற்றலோடும், தனது கவிதைகள் எப்போதும் உயிர் வாழும் என்ற வித்துவச் செருக்கோடும் வாழ்ந்த கவிஞன் சில்லையூர் செல்வராஜன். ஆயிரக் கணக்கான கவிதைகளின் சொந்தக்காரன் சில்லையூர். அவரது கவிதைகள் மீண்டும் நூலுரு பெறவேண்டும். பேராசிரியர் கைலாசபதி தினகரன் பிரதம ஆசிரியராய் இருந்த காலத்தில் அங்கதச் சுவையோடு அவர் எழுதிய கவிதைகள் பெரிதும் பேசப்பட்டன.
கவி எழுத்தை தன் தலையெழுத்தாக மட்டுமன்றி தனது வாழ்வெழுத்தாகவும் வாழ்வாதாரமாகவும் இறுதிவரை கொண்டு வாழ்ந்தவர்தான் தான்தோன்றிக் கவிராயர் என்று புனைப்பெயர் கொண்ட சில்லையூர் செல்வராசன். அவர் பன்னிரண்டு வயதினிலே எழுதிய எனக்குள் ஒருவன் இருக்கின்றான் என்ற அவரது முதல் கவிதையை தனது ‘ஊரடங்கும் பாடல்கள்’ என்ற நூலில் முதலில் தந்துள்ளார். தான் சிறு வயதிலேயே தமிழ் கற்ற வரலாற்றையும் தனக்கு தமிழ் பழங்கவிதைகளில் ஏற்பட்ட ஈடுபாட்டையும் விலாவாரியாக இதில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மீண்டும் அவரது கவிதைகளைப் படித்துப் பார்த்தபோது அவா கவிதை உலகில் எவ்வாறான விஷ்வரூபம் எடுத்திருந்தார் எனபதை அறிய முடிந்தது. கவியரங்கில் கவிதை பாட வந்தவுடன் முதலிலே தனது தாயைப் போற்றிதான் கவிதை பாடுவார். அவரது கணீர் குரலில் அவ் வரிகளைக் கேட்டவுடன் சபையோர் ஆடாது அசையாது நிற்பர். இசைப்பாடல்களாகவும், மெல்லிசைப் பாடல்களாகவும், கவிதை நாடகங்களாகவும் அவர் எழுதியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இவர் திகழ்ந்தார்.
அவரது கவிதைகள் இன்றைய தலைமுறையினரால் வாசிப்புச் செய்யப்பட வேண்டிவை. சுதந்திரன், தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். பிறகு விளம்பரக் கம்பனியில் பணியாற்றியதுடன் சொந்தமாகவும் விளம்பரக் கம்பனி வைத்து நடாத்தினார். விளம்பரத்துறையில் புதிய உத்திகளைப் புகுத்தினார். பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறாவிட்டாலும்கூட.
பேராசியர்களும், கல்விமான்களும் இவரை பெரிதும் மதித்தார்கள். அவரின் ‘ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி’ என்ற நூல் பல்கலைக் கழக ஆய்வுகளுக்கு பெரிதும் துணை நின்றது. ‘தணியாத தாகம்’ என்ற திரைப்பட சுவடியொன்றையும், ‘ஞான சௌந்தரி’ என்ற தென்மோடி கூத்தொன்றையும் வெளியிட்டார். நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவற்றிலும் மிகுந்த நாட்டம் கொண்டவராக அவர் இருந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் தமிழுருபடுத்தியுள்ளார். ‘எப்போதும் இதயம் இடதுசாரிதான்’ என்ற அவரது கவிதை புகழ்ப்பெற்றது. இலங்கை சார்பாக இந்தியா போபாலில் நடைபெற்ற சர்வதேச கவிஞர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்க் கவிஞன். போல்பொயின்ட் பேனாவுக்கு ‘குமிழ்முனைப்N;பனா’ என்ற தமிழ்ச் சொல்லைத் தந்தவரும் சில்லையூர் செல்வராசன்தான். இன்றைய தலைமுறையினர் அவரிடம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளமிருக்கின்றன’ என்றார்.
சுடர் ஒளி பத்திரிகையின் 15 வருட பூர்த்தியை முன்னிட்டு சுடர் ஒளி பத்திரிகை சார்பாக அதன் பிராந்திய நிருபர் அட்டாளச்சேனை மன்ஸூர் ‘சுடர் ஒளி’ பத்திரிகை, ‘ஒளி அரசி’ சஞ்சிகை ஆகியவற்றோடு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட வாசிப்புத் தொடர்பான அட்டையினையும் வகவத்திற்கு கையளித்ததோடு சபையோருக்கும் வழங்கிவைத்தனர்.
கவிஞர் கம்மல்துறை இக்பால் தலைமையில் விறுவிறுப்பான கவியரங்கு நடைபெற்றது. கவிஞர்கள் கலைவாதி கலீல், எம்.ஏ.எம். நிலாம்,தாஜ்மஹான், வெளிமடை ஜஹாங்கீர், போருதொட்ட ரிஸ்மி, சுபாஷினி பிரணவன், கட்டாரிலிருந்து வந்திருக்கும் மெய்யன் நடராஜ், ஆஷிகா, உணர்ச்சிப் பூக்கள் ஆதில், எம்.பி.எம். நிஸ்வான், க. லோகநாதன், கிண்ணியா அமீர் அலி, குவைட்டிலிருந்து வந்திருக்கும் நஸீமா முஹம்மத், வதிரி. சி. ரவீந்திரன், கவிக்கமல் ரஸீம், அ.க.மு.இல்ஹாம், எம்.பிரேம்ராஜ், எஸ்.ஏ.கரீம், ச.தனபாலன், எம்.எஸ்.அப்துல் லத்தீப், அட்டாளச்சேனை மன்ஸூர், எம்.ஏ.எம்.ஆறுமுகம், அலி அக்பர், ஆ. ஜொயெல், ரஷீத் எம்.இம்தியாஸ், பர்ஹாத் சித்தீக், மேமன் கவி ஆகியோர் கவிதை பாடினர்.
டாக்டர் தாசிம் அகமது, த. மணி, இர்ஷாத் ஏ.காதர், ஏ.எம். அஸ்கர், ஏ.எம்.எஸ்.உதுமான், துவான் ரபாய் டெவங்ஸோ, ஜோபு நஸீர், வெலிபன்னை அத்தாஸ், எம்.நஸ்விர், எம்.கௌஸுல் ஹுசைன், எஸ.என்.எஸ்.ரிஸ்லி சம்சாட், எம்.எம்.நவாஸ்தீன், எம்.குணரத்தினம் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
The post சில்லையூர் செல்வராசன் அரங்கில் வகவத்தின் 32 வது கவியரங்கு appeared first on Sri Lanka Muslim.