-முஹம்மது ராஜி-
_இது அக்டொபர் மாதம் .. நாம் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட மாதம் ..1990 களில் நாம் பட்ட அவஸ்தைகள் கவிதையாக …_ …
*அகதியாகும் போது…*
மணல்களில் அம்மணமாய்
மல்லாந்து கிடக்கும் போது
முள்ளுகள் கூட
முதுகுகளை
முரட்டுத்தனமாக குத்தும்.
+
பள்ளி நில முகாம்களில்
பாய்களை தாண்டி
ஈரலிப்பு தரையில்
ஈட்டியோடு தலை காட்டி
போட்டி போட்டு குத்தும்
புழுக்கள்..
+
கூப்பன் கடைகள் முகாமைகளுக்கு
கொப்பன் வீட்டு கடைகளாகும்
கல்லுகளுக்குள் அரிசியை
வில்லைகள் வைத்து தேட
வேண்டியிருக்கும்
+
வானத்தின் மனஉளைச்சல்
விழிகளை திறக்கும் போது
துவாரம் விட்டு நெய்த
தென்னோலை இடைகளால்
தூவானம் அடிக்கும்.
தூக்கம் விரண்டு ஒடும்
துயில் எழுந்த விஷ ஜந்துக்களின்
பல் விலக்கும் சத்தம்
பயத்தை இதயத்தில் புகுத்தும்
+
‘பெரியார்களே சகோதரர்களே..’
பள்ளிகளின் ஸ்பீக்கர்கள்
வெள்ளிகளை அலங்கரிக்கும்..
மதில்களை தாண்டி
‘வந்தான் வரத்தான்’
வீதிகளில் உலா வரும்
+
பனையோலை வேலி ஓரம்
பதம் பார்க்கும் விரல்களை. .
பாதையெல்லாம்
பொசுக்குகிற
போர்க்களமாகும்.
மாலை நேர
பள்ளிக்கூடங்கள்
எள்ளி நகையாடும்.
வீதியோர நாய்கள் கூட
வெறித்து முறைக்கும்.
+
குளங்கள்
கொலைக்களங்கள் ஆகும் .
கூடி நிற்கிற காவாலிக்கூட்டம்
ஓட ஓட ஓரத்தை நோக்கி விரட்டும்
ஓட்டை வீட்டின் வாடகைகள்
ஓவர்களாகி கூரைகளை பிய்க்கும்.
உப்பளத்தின் நாட்கூலிகள்
உணர்வற்று வெறித்துப்பார்க்கும்
ஊரில் வேண்டாத பயல்களுக்கெல்லாம்
கார சாரமாய் பேச்சும் வரும்.
+
நாடி நரம்பெல்லாம் புடைக்கும்.
அடி வயிற்றின் பசி அதை அடக்கும் .
‘பனங்கொட்டையன்’ என்று
‘பலாக்காய்கள்’ அழைக்கும்
பாவம் செய்த பிறவிகள் என
பள்ளி மிம்பர்கள் கூவும்.
+
அகதியாகும் வலியை
அரை நாள் மட்டும் உணர்ந்து பார் ..
காதலின் வலி
எதிரிக்கும் வேண்டாம் என்று
கவிஞன் சொன்னதின் பொய்யை
கண்டு கொள்வாய் ..
–
The post அகதியாகும் போது…! appeared first on Sri Lanka Muslim.