Mohamed Nizous
கொடுக்கல் வாங்கல்களில்
குறைகள் செய்யார் என
அடுத்தவர் போற்றும் விதம்
அழகாய் இருந்தார் அன்று
‘குடு’க்கள் வாங்கலில்
கொலையும் செய்வாரென
எடுத்துப் பேசுமளவு
இழிவாய்ப் போனது இன்று
வட்டி என்று சொன்னால்
கிட்டவும் வரமாட்டார் என
தட்டிச் சொல்லுமளவு
தரமாய் இருந்தார் அன்று
கெட்ட வட்டி கட்ட
கட்டிய வீட்டையும் விற்கும்
முட்டாள் ஆட்கள் என்று
முனியப்படுகிறார் இன்று
அடக்க ஒடுக்கம் கொண்டு
அழகாய் குடும்பம் காத்து
நடக்கும் பெண்கள் என்று
நம்மவர் இருந்தார் அன்று
படத்தில் வருவது போன்று
பாஷன் பின்னால் செல்லும்
மடத்தனமான சிலரால்
மானமே போகுது இன்று
ஹாஜியார் கடைக்குச் சென்றால்
கணக்காய் நிறுத்துத் தருவார்
பூஜை செய்வோர் கூட
பொருள் வாங்க அன்று வந்தார்
பேச்சால் மயக்கி நடித்து
பிழையான பொருளைத் தருவான்
யோசிச்சுப் போங்க என்று
இமாமே சொல் நிலை இன்று
அமல்கள் கூடியிருக்கு
அறிவும் கூடி இருக்கு
ஆனால் அஹ்லாக் நேர்மை
அகன்று போய் இருக்கு
அடுத்தவன் போல தானும்
ஆடம்பரம் வேண்டும் என்று
ஆட்டம் போடும் சிலரால்
அன்று சமூகம் பெற்ற
அந்த உயர் மதிப்பு
அழிந்து போகின்றது…!
The post இழந்து போன எங்கள் மரியாதை appeared first on Sri Lanka Muslim.